திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, கேட்பாரின்றி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் மலைக்குன்றில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.அதற்கு சற்று தொலைவு தென்மேற்கில், பக்தவச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில், சதுரங்கப்பட்டினம் சாலையை ஒட்டி, லட்சுமி தீர்த்தம் எனப்படும் பிரம்மதீர்த்த குளம் உள்ளது. கோவில் நிர்வாகம், இக்குளத்தை நீண்ட காலமாக பராமரிக்காமல், நான்கு புறமும் ஆக்கிரமிக்கப்பட்டு, துார்ந்து சீரழிந்தது. பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்க முடிவெடுத்து, தற்போது குளத்தை துார் வாரி பராமரிக்கிறது. சில நாட்களுக்கு முன், குளத்தின் தெற்கு பகுதியில், கல்லில் வடிக்கப்பட்ட நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல், கேட்பாரற்று கிடப்பதால், அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.