திருப்பூர்; திருப்பூர், பெரிச்சிபாளையத்திலுள்ள வீரமாத்தி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி சிலம்பாத்தாள்- பெத்தாயமம்மன் சுவாமிகளுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அம்மை அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மஞ்சள் மற்றும் மல்லிகைப்பூவால் சிலம்பாத்தாள் -பெத்தாயமம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட மணவறையில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சுவாமிகள் குதிரை மீது திருவீதியுலா அழைத்து வரப்பட்டனர். இதில், பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்று ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.