மந்தை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சுமங்கலி பூஜை
பதிவு செய்த நாள்
18
ஜூலை 2025 04:07
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே மந்தை மாரியம்மன் கோவிலில், சுமங்கலி பூஜையும், வெள்ளிக்கிழமை பூஜையும் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 13ம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி வேள்வி வழிபாடுடன் பூஜை நடந்தது. பின்பு, 16 வகை வாசனை திரவியங்களால் அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்காரம், பேரொளி வழிபாடும் பூஜையும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜடையம்பாளையம் புதூர் ஊர் கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர். மேட்டுப்பாளையம் காட்டூர் ஜெகநாதன் லே அவுட்டில் உள்ள தவிட்டு மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி பூஜை நடந்தது. கோவில் நடை திறந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வளையல்களால், அம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். 24ம் தேதி ஆடி அமாவாசை அபிஷேக அலங்கார பூஜையும், 25ம் தேதி ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை விழாவும், 28ம் தேதி ஆடிப்பூரம் விழாவும், இரவு அம்மன் பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை விழாவும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜையும், எட்டாம் தேதி ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை பூஜையும், அன்று வரலட்சுமி விரதம் பூஜையும், பவுர்ணமி சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி ஆடி மாத ஐந்தாம் வெள்ளி அலங்கார பூஜையும், வசந்தம் நகர் ஆதி முனியப்பன் கோவில் இருந்து பால்குடம் எடுத்து வந்து மகா அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற உள்ளது. அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
|