தி. வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி; கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 04:07
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி ஸ்ரீமூலபால கால பைரவர் என்றழைக்கப்படுகிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மூலவர் மூலபாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து சிவாச்சார்யர்களால் மகா பைரவயாகம், கோ பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய்,வஸ்திரம்,புஷ்பயாகத்தை தொடர்ந்து மகாபூர்ணாகுதி ஆகி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் நிறைந்த கலசங்களுக்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம், கற்பூர தீபம் ஆகிய தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெண்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டனர்.