ஆடி முதல் சனி; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2025 01:07
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனிக்கோயில் வேறு எங்கும் இல்லை.
சுயம்புவாக தோன்றிய இந்த கோயில் சுரபி நதி கரையில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் பெருந் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் நான்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள். கோயிலில் திருப்பணி வேலைகள் நடப்பதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே அறநிலைய துறை திருவிழாவை கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி திருக்கல்யாணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் கூறியித்தனர். ஆடி முதல் சனிக்கிழமை என்பதால், அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமான உற்சாகத்துடன் பக்தர்கள் , சுரபி நதியில் குளித்து, காக்கை வாகனம் வாங்கி விடுவது, எள்ளு, பொரி போன்றவற்றை படைப்பது உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செய்தனர். பின்னர் மலர் அலங்காரத்தில் இருந்த சுவாமி சனீஸ்வர பகவானை நீண்ட வரிசையில் இருந்து தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையிலான கோயில் பணியாளர்கள் சுமூக சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.