சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், மல்லிகாபுரத்தில், நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், தமிழ்செல்வன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர், மல்லிகாபுரம் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.அங்குள்ள விவசாய நிலத்தில், தலா ஒரு அடி உயரம், அகலம் உள்ள ஐந்து வரி கல்வெட்டை கண்டெடுத்தனர். அதைப் படியெடுத்து, கல்வெட்டறிஞர் ராஜகோபாலுக்கு அனுப்பினர்; அதை படித்த பின், அவர் கூறியதாவது: இதில் உள்ள எழுத்துகள், நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால தமிழி வடிவில் உள்ளன. இதில், ‘கருங்காலி நல்லுாரான் கண்ணந்தைகண் மகன் விண்ணன் ஆன் பூயலுட்பட்டான்’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது, தற்போதுள்ள கருங்காலிப்பாடியைச் சேர்ந்த விண்ணன் என்பவன், ஆநிறை கவர்ந்த போரில் வீர மரணம் அடைந்துள்ளான். அவனுக்கு, இது நடுகல்லாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நடுகல்லில், வீரனின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதில், தகவல் மட்டுமே உள்ளது. இதுபோல், ஏற்கனவே புலிமான்கோம்பை, பொற்பனைக்கோட்டை, தாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளது. மிகவும் பழமையான இந்த கல்வெட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.