பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
06:07
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சூரியதீர்த்தம், கோயில் எதிரில் உள்ள வருண தீர்த்தகுளங்கள் பராமரிப்பு இல்லாததால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என பழமையும் பெருமையும் வாய்ந்த இக் கோயிலில் சூரியன், அகத்தியர், அரிச்சந்திரன், வருணபுத்திரன், மார்க்கண்டேயன், வசிட்டர் உள்ளிட்ட பலரும் வணங்கியதாக புராண வரலாற்றில் உள்ளது. பிரதோஷம், வைகாசி விசாகம் மற்றும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும். வெளிமாவட்டங்களிலிருந்து இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கோயில் மேற்பகுதியில் தட்டோடு பதிக்கபட்டும், பிராகரத்தை சுற்றிலும் கற்கள் பதிக்கபட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இக்கோயிலுக்குள் சூரியதீர்த்தம் உள்ளது. பண்டைய காலத்தில் இந்த தீர்த்தகுளத்திலும், கோயில் எதிரில் உள்ள வருண தீர்த்தத்திலும் குடங்களில் புனித நீர் சேகரித்து யானை மூலம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிேஷகம் நடந்துள்ளது. தற்போது இரு குளங்களுமே பராமரிப்பு இல்லாமல் பாசி படர்ந்து பயனில்லாமல் உள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: சூரியன் வழிப்பட்ட இக் குளம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது கவலையாக உள்ளது. தீர்த்தகுளத்தில் ஆங்காங்கே சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உள்ளே குப்பை குவிந்துள்ளது. நீரில் பாசிபடர்ந்து, சேரும், சகதியுமாக உள்ளது. எனவே சூரியதீர்த்தம், வருண தீர்த்த குளங்களை பராமரிப்பு செய்து, துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.