திருப்போரூர்; மேட்டுத்தண்டலம் தண்டுமாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா, விமரிசையாக நடந்தது. திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரம், ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, 16ம் ஆண்டு ஆடி திருவிழா வைபவம், இம்மாதம் 17ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 18, 19, 20ம் தேதிகளில் மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்து வந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மேல், மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. மாலை, 3:00 மணியளவில் ஊரணி பொங்கல் வைத்தல், கும்பம் களைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் விடையாற்றி உத்சவத்துடன், ஆடி விழா நிறைவடைகிறது.