சொரிமுத்தையனார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 11:07
திருநெல்வேலி; ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் சொரிமுத்தையனார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா விமரிசையாக நடைக்கிறது. இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயில் பகுதியில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் குடும்பத்தோடு தங்கியுள்ளனர். இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக சங்கிலி பூதத்தார் சன்னதி முன்பு சாமி ஆடுபவர்கள் சங்கிலியால் உடலை அடித்து கொள்வதும், இரவில் பூக்குழி இறங்குவதும் சிறப்பானதாகும். பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்தனர். பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் கொண்டு வரும் பைகளை சோதனை செய்த வனத்துறையினர், பிளாஸ்டிக் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு காரணமாக தனியார் வாகனங்களுக்கு ஒரே ஒரு நாளில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அரசு பஸ்களின் மூலமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை, போலீஸ், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 600-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். பக்தர்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கும் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சதீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் உள்ளனர். நகரும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.