பதிவு செய்த நாள்
25
ஜூலை
2025
12:07
சென்னை; பாரிமுனை தம்பு செட்டி தெருவில் ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகள் மிகவும் பழமையான கோவில்.
இது 1677ல் சாம்ராட் சிவாஜி மன்னன் வருகை புரிந்து வழிபட்டு வெற்றிகள் பெற்றதும், பாட்டுக்கொரு புலவன் சுப்ரமணிய பாரதியாரால் பாடப்பெற்றதும், கோபேஷீ காளி சமரேஷீ துர்க்கா என்ற சக்தி இத்திருக்கோயிலில் கருணை பொழியும் காளிகாம்பாளாக திகழ் கின்றாள். திருவாசகத்தில் மாணிக்க வாசகர் நவசக்திகளில் ஒரு சக்தியாக ஸ்ரீ காளிகாம்பாளை புகழ்ந்து போற்றுகின்றார். இக்கோவிலின் வாசலில் உள்ள கிழக்கு ராஜகோபுரம் 1983ல் கட்டப்பட்டது. ஸ்ரீ அம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் நிறுவப்பட்ட அர்த்தமேரு அமைந்துள்ளது.
மூலவர் உட்பிரகாரத்திற்கு மேற்கில் உத்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீ அம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகா தேஜசுடன் மகா லட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் இருபக்கங்களிலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றாள். “ஸ்சாமர ரமாவாணி ஸ்வயதக்ஷிணி ஸேவிதா” என்று ஸ்ரீ லலிதர சஹஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது. லக்ஷ்மி தேவியும். சரஸ்வதி தேவியும் தன்னுடைய வலது, இடது பக்கத்திலும், வெண் சாமரத்துடன் நின்று சேவிக்கப் படுபவள் என்பது இதன் கருத்து. அம்பாளின் முன்னிலையில் திருமகளும், கலைமகளும் பணிப்பெண்களாக இருந்து பணிபுரிகின்றனர். உலக நடைமுறையில் செல்வமும், கல்வியும் சேர்ந்திருப்பதைக் காண்பதரிது. ஆனால் அம்பாளின் அருளுக்கு பாத்திரமாகின்றவர்களிடம் கல்வியும், செல்வமும் சேர்ந்தே அமையும் என்பது உறுதி.
பெரிய நாயகி உற்சவர் அம்பாளே கிண்ணித் தேரில் திருவீதி வலம் வருகிறாள். ஸ்ரீ அம்பாள் சிறிய நாயகி உற்சவர் பெரும்பாலும் கோயில் பிரகார மண்டபத்துக்குள்ளே பிரதக்ஷிணம் வருவதுண்டு. உத்சவர் மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் அழகுற அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் எட்டு துாண்களில் அஷ்டாட்சரியை நினைவூட்டும் வகையில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன், சிறிய திருவடி வழிபடும் பெண் தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் அமைந்துள்ளன. காளிகாம்பாள், பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாய் வீற்றிருக்கின்றாள்.
இத்திருக்கோயில் உயர்நீதி மன்ற நிர்வாகத் திட்டத்தின்படி சென்னையிலுள்ள விஸ்வகர்ம சமுதாயத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து அறங்காவலர்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். இன்று சென்னையிலுள்ள திருத்தலங்களில் முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் வருகை புரியும் ஸ்தலங்களில் முதன்மையாகவும், முதலமைச்சரின் அன்னதான திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பது ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் தான் என்று கூறுவது மிகையாகாது.
காளிகாம்பாள் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும். கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள். குறிப்பாக திருமணமாகாதவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தொடர்ந்து 11 வாரங்கள் காளிகாம்பாளை தரிசித்தால் திருமணமும், குழந்தை பாக்கியமும் கைகூடும். இத்தகைய சிறப்புடைய காளிகாம்பாள் கோவிலில் ஆடி பெரு விழாவில் 9 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உத்சவம் நடை பெறும். தொடர்ந்து 10 ஞாயிற்றுக் கிழமைகளில் 108 குடம் பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், பூக்கள், புஷ்பாஞ்சலி அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆராதனைகள் நடக்கும். கோவில் பணிகளை அறங்காவலர் குழு தலைவர் இ.எம்.எஸ். மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், இரா.இராஜேந்திரகுமார், ஜெ.ரமேஷ், நிர்வாகிகள், அலுவலக மேலாளர், மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காளிதாஸ் சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார் பெருமக்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கோவி ல் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது .
கோவில் திறப்பு நாட்கள் மற்றும் நேரம்
காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9:00 மணி வரை
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
காலை 5:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் இரவு 9:30 மணி வரை
காலை 5:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.