திருவண்ணாமலை: ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழாவில் தினமும் காலை, மாலை என இரு வேளையும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான இன்று கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்தகுளத்தில் பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. பின், குளக்கரையிலுள்ள வளைகாப்பு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் அம்மனுக்கு வளையல், மஞ்சள் , குங்குமம், பூ, உள்ளிட்ட பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.