மடப்புரத்தில் ஆகம விதிகள் மீறல், அறநிலையத்துறை மீது பக்தர்கள் புகார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 11:07
திருப்புவனம்; மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பாலாலயம் நடத்தி சேதமடைந்த சிலைகளை சரி செய்த நிலையில் பரிகார பூஜை நடத்தாமல் இருப்பது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.
பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் பன்மடங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். மடப்புரம் காளி அருகே உள்ள பூதகணங்கள், கன்னிகையர் குதிரை சிலைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்திருந்தன. அவற்றை உபயதாரர்கள் நிதி உதவியுடன் சரி செய்ய கடந்த மார்ச் 12ம் தேதி பாலாலய விழா நடத்தி, பின்பு சரி செய்யும் பணி நடந்து முடிந்தது. பொதுவாக கோயில்களில் சிற்பங்கள், சாமி சிலைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்திருந்தால் அவற்றை சரி செய்த பின் சிறப்பு பூஜை நடத்தி புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இது ஆகம விதி, ஆனால் மடப்புரத்தில் சிலைகளை சரி செய்து முடித்த பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவில்லை. மடப்புரம் காளி ஆக்ரோஷமான தெய்வம், எனவே அம்மனை சாந்தப்படுத்த எலுமிச்சம்பழம் மாலை அணிவிக்கப்படுகிறது. ஆக்ரோஷமான தெய்வத்தின் சிலைகளை சரி செய்த போது அதனை சாந்தப்படுத்த பூஜைகள் செய்திருக்க வேண்டும், அதனை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி விட்டனர். ஆடி மாத உண்டியல் வசூலை கருத்தில் கொண்டு எந்த வித பரிகார பூஜையும் செய்யாததால், தான் மடப்புரத்தில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இனிமேலாவது அதிகாரிகள் பரிகார பூஜை செய்து அம்மனை சாந்தப்படுத்த வேண்டும், மடப்புரம் கோயிலை ஒட்டி கோசாலையில் உயிர்ப்பலி நிகழ்ந்தும் இன்று வரை பரிகார பூஜையையும் அதிகாரிகள் நடத்தவே இல்லை. இது பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.