சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பதிவு செய்த நாள்
31
ஜூலை 2025 10:07
சபரிமலை: சபரிமலையில் நேற்று நடந்த நிறைப்புத்தரிசி பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கேரள பூஜை விதிகளை பின்பற்றும், குமரி மாவட்ட கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. விவசாயம் செழிக்கவும், மக்களின் வளமான வாழ்க்கைக்காகவும் வயலில் விளையும் நெற்கதிர்களால் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஆடியில், இந்த பூஜை நடைபெறுகிறது. சபரிமலை நடை, இதற்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அச்சன்கோவில் உள்ளிட்ட தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள், அறுவடை செய்து தலை சுமடாக கொண்டுவரப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி பிரம்மதத்தன், ஐயப்பன் சிலைக்கு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து, நிறைப்புத்தரிசி பூஜைகளுக்கான சடங்குகள் தொடங்கின. மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி, பூஜிக்கப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்த பின், அதை ஸ்ரீகோவிலுக்குள் கொண்டு சென்றார். பூஜைகளுக்கு பின், அந்த நெற்கதிர் வெளியே கொண்டுவரப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் சபரிமலையில் கூடியிருந்தனர். நேற்று வழக்கமான உஷபூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, படி பூஜை, அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கேரள பூஜை விதிகளை பின்பற்றி, பூஜைகள் நடைபெறும் கன்னியாகுமரி, சுசீந்திரம், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோவில்களிலும், புத்தரிசி பூஜை நடந்தது.
|