ஆடிப்பெருக்கு; அன்னை காவிரியை வழிபடுவோம்.. நம்பெருமாள் அருள்பெறுவோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2025 09:08
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். வளமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறும் விதமாக காவிரித் தாயானவள் பெருக்கெடுத்து ஆடியும் ஓடியும் வரும் நாளாகவே ஆடிப்பெருக்கு நாள் அமைந்துள்ளது. இது இயற்கை நமக்கு வழங்கும் கொடை ஆகும்.
ஆடி மாதம் 18ம் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்க தேவையான நீரை போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளை தேர்ந்தெடுத்தனர். இந்த விழா தற்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம்.
ரங்கநாதன் தங்கச்சி: காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப் படுகிறாள். இந்நாளில்,சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி 18 ல் காவிரியில் நீராடி காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.அட்சய திரிதியை விட ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால் ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.
அனைத்துமே சிறப்பு; காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கை கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். தமிழர்களாகிய அனைவரும் இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் இந்நாளை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கலாம். குறிப்பாக இந்தாண்டின் ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த அம்பாள் வழிபாடு; ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர். ஆடிப்பெருக்கு நாளில் எது தொட்டாலும் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குல தெய்வ வழிபாடுகளில் பொதுமக்கள் வழிபடுவர். சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு விசேஷமான நாள். கருகுமணி, நறுமண வாசன திரயவியங்களோடு உருவ வழிபாடின்றி ஆற்றங்கரைகளில் வழிபாடுகளில் ஈடுபடுவர். சிவலாயங்களில் வழிபடுவது விஷேசம். இதிலும் அம்பாள் வழிபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.