தொண்டாமுத்தூர்; பேரூரில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், ஆடிப்பெருக்கையொட்டி, முன்னோர்களுக்கு படைக்கப்பட்ட படைப்புகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, ஆதரவற்றோர்களுக்கு வழங்கப்பட்டன. பேரூர் படித்துறையில், ஆடிப்பெருக்கையொட்டி, ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு, படையல் வைத்து வழிபட்டனர். இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ‘நோ புட் நோ வேஸ்ட்’ அமைப்பு மற்றும் பேரூர் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, பேரூர் படித்துறையில், பொதுமக்கள், தங்களின் முன்னோர்களை படையலிட்டு வழிபட்ட பின், அந்த படையலில் வைக்கப்பட்டிருந்த, ஜிலேபி, லட்டு போன்ற இனிப்பு பலகாரங்கள், பழங்கள் என, 2 டன் உணவுப்பொருட்கள், புத்தாடைகளை சேகரித்தனர். பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து, தங்களின் படையல் பொருட்களை, தன்னார்வலர்களிடம் வழங்கினர். சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோவையில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு, உணவாக வழங்கப்பட்டன. அதோடு, பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் வீசக்கூடாது எனவும், ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.