திருமலையில், ஆண்டுதோறும், 450 உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. அதில், பவித்ரோற்சவம் முக்கியமானது. கோவில் தினசரி பூஜைகளில், ஏதேனும் குறை இருந்தாலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களை அறியாமல் செய்த தவறுகள், அவற்றால் ஏற்பட்ட தோஷங்களை களைய, ஆண்டுதோறும், ஆடி மாதம், பவித்ரோற்சவம் வைகானச ஆகம விதிப்படி கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும், பவித்ரோற்சவத்தின் முதல் நாளான இன்று மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காலையில் பவித்ர மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னபன திருமஞ்சனம் விழா நடைபெற்றது. இதில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் மாலையில், ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயர் சுவாமிகள், கோவில் தலைமை அர்ச்சகர்கள், கோவில் துணை அலுவலர் லோகநாதம், பேஷ்கார் ராமகிருஷ்ணர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.