அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் ஆக.9ல் ஆடி அசைந்து ஓட தயாராகும் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2025 11:08
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் ஆக., 9 காலை 8:40 மணிக்கு மேல் நடக்கிறது.
இந்த தேர் 5 நிலைகளுடன் 51 அடி உயரம் கொண்டது. தேக்கு, வேங்கை மரத்தால் ஆனது. தேரின் கீழ்பகுதியில் 162 சுவாமி சிற்பங்களும் மேல் பகுதியில் 62 கலைச் சிற்பங்களுடன் மொத்தம் 400 சிற்பங்கள் வரை உள்ளன. இத்தேரை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. கோயில் துணை கமிஷனர் யக்ஞநாராயணன் கூறியதாவது: ஜூலை 25ல் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் மேலுார் ஆர்.டி.ஓ., சங்கீதா தலைமையில் நடந்தது. பொதுப்பணித் துறையினரிடம் தேரின் நிலைத்தன்மைக்கான சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தின் போது எஸ்.பி. அரவிந்த் தலைமையில் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோடும் வீதிகளில் 8 இடங்களில் குடிநீருக்கான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 லாரிகளில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. வாகன நிறுத்தம், தற்காலிக கழிப்பறை வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்லாளப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மீனாட்சி மருத்துவமனை சார்பில் 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. அவசர தேவைக்காக 2 ஆம்புலன்சுகள் கோட்டைச் சுவர் ஒட்டி நிறுத்தப்படுகின்றன. மலைப்பாதை அருகே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட உள்ளது. தேருக்கான புதிய வடம், இசம்புத்தடி (முட்டுக்கட்டை) தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு கூறினார். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.