சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 10:08
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி நேற்று மாலை விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா ஜூலை 28ம் தேதி காலையில் கோமதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடக்கிறது. தினமும் கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தினமும் மண்டகப் படி விழாவும் நடந்தது. ஆக., 5ல் தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நேற்று மாலையில் தெற்குரதவீதியில் நடந்தது. தபசு கோலத்தில் இருந்த கோமதி அம்மனுக்கு, சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயண சுவாமியாக காட்சி தரும் தபசு காட்சி நடந்தது. தொடர்ந்து அம்மன், சுவாமியை வலம் வந்தார். இரவில் சங்கரலிங்கசுவாமி யானை வாகனத்தில் காட்சி தரும் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.