வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 11:08
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்றிரவு திருக்கல்யாணம் நடந்த நிலையில், நாளை (ஆக.9) மாலை தேரோட்டம் நடக்கிறது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, ஆக.1ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றிரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நாளை(ஆக.9) காலை 8:00 மணியளவில் கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமமும், மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் மாலை 4:00 மணியளவில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் ரத வீதிகள் வழியே வலம் வரும். இரவு 8:00 மணியளவில் சுவாமி தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் தங்கலதா, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.