மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணியதில், 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம். கடந்தாண்டு வாரம் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா நடந்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையிலும், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து, தன்னார்வலர்களும், வி.என்.கே., மகளிர் கல்லூரி மாணவிகள், காரமடை சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கைகள் என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில், 20 நிரந்தர உண்டியல்களில், 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 60 ரூபாயும், இரண்டு தட்டு காணிக்கை உண்டியலில், 14 லட்சம், 16 ஆயிரத்து, 934 ரூபாய் இருந்தது. திருவிழாவிற்காக தற்காலிகமாக வைத்த உண்டியலில், 6 லட்சத்து, 13 ஆயிரத்து, 626 ரூபாய் பக்தர்களின் காணிக்கை இருந்தது. உண்டியலில் தங்கம், 58 கிராம், வெள்ளி, 90 கிராம் இருந்தது. மொத்த காணிக்கையாக, 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.