வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2025 06:08
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று மாலை தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஆக.1ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் ஆடித்திருவிழா வருகிற ஆக.13 வரை நடக்கிறது. நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த ஆக.7 இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடந்தது. முன்னதாக காலையில் கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமமும், மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 4:50 மணியளவில் பக்தர்கள் கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், திருச்சி ரோடு வழியே நகரை வலம் வந்தது. பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.