அயோத்தி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் 91வது ஜெயந்தி மஹோத்ஸவம், அயோத்தியில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கரர் மடத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அயோத்தி, கோண்டா மற்றும் பஸ்தியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுக்ல யஜுர் வேத பாராயணம், சுந்தர் காந்த் பாராயணம் மற்றும் இஷ்டி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாளின் மூர்த்திகளின் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அனைத்து வைதீகர்களும் ஹர் ஹர் ஷங்கர் ஜெய் சங்கர் காஞ்சி சங்கர் காமகோடி சங்கர்! என்று கோஷமிட்டபடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 500 பேருக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. அயோத்தியைச் சேர்ந்த 4 வித்வான்களுக்கும் சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிஜியின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்த, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் கரசேவக்புரம் ஆகியவற்றின் தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று கான்பூரில் உள்ள சங்கரா கண் அறக்கட்டளை, அயோத்தியில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர் மடத்திலும் ஒரு கண் முகாமை ஏற்பாடு செய்துள்ளது.