விழுப்புரம்; ஜலதரமாரியம்மன் கோவில் ஆடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே கண்டமானடி, ஜலதரமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு ஜலதரமாரியம்மன், கங்கையம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ஆழங்கால் கரையில் சக்தி கரகம் ஜோடித்து ஊர்வலம் வந்தது. ஏராளமான பெண்கள் கூழ்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். மதியம் 2:00 மணிக்கு ஜலதரமாரியம்மன், கங்கையம்மன் கோவில்களில், அம்மனுக்கு கூழ் ஊற்றி படையலிட்டனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மின்னொளியில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 5 நாட்கள் உற்சவம் நடக்கிறது.