பதிவு செய்த நாள்
12
ஆக
2025
12:08
ஹிந்து மத கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படும் ராமர், ஹிந்துக்களின் முக்கிய தெய்வமாக உள்ளார். ராமரை பூஜித்து வழிபடுவதன் மூலம் மன வலிமை அதிகரிப்பதுடன், தீமைகளில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
ராமரின் வாழ்க்கை வரலாறு தர்மம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், அவரது குணங்களை பின்பற்றி வாழ்ந்தால் உலகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கையை வாழவும் முடியும். ராமநவமி அன்று விரதம் இருந்து ராமரை வணங்கினால், ஹனுமன் பலம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பின், நாடு முழுதும் உள்ள ராமர் கோவில்களின் மவுசு அதிகரித்து உள்ளது.
பெங்களூரிலும் பக்தர்களை கவரும் வகையிலான, ராமர் கோவில் அமைந்து உள்ளது. பெங்களூரின் தொட்டேனகுந்தி கார்த்திக் நகரில் உள்ளது கோதண்டராமசாமி கோவில். கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள பிரமாண்ட கோபுரம், கொடிமரம், ஹனுமன் சிலை பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. சீதா, லட்சுமணன் சமேத ராமர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராமருக்கு நேராக அமர்ந்து மனம் உருகி, ராமரை தரிசித்தால் வாழ்வில் ஏற்படும் கவலைகள் நொடி பொழுதில் நீக்கி விடும் என்று, இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் தொட்டேனகுந்தி ஏரி உள்ளது. சாமி தரிசனம் செய்த பின், நேரத்தை போக்குவதற்கு ஏரிக்கு சென்றும் வரலாம்.
இக்கோவில் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, கல்வி, கலாசார நிகழ்ச்சிகளையும் செய்து, கலாசார மையம் என்றும் பெயர் பெற்று உள்ளது. தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.
மெட்ரோ ரயில் வசதி
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, தொட்டேனகுந்திக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன 333எப் பஸ்சில் செல்ல வேண்டும். மெட்ரோ ரயிலில் செல்வோர் ஒயிட்பீல்டு செல்லும் மெட்ரோ ரயிலில் சென்று, சீதாராமபாளையாவில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்.