பதிவு செய்த நாள்
12
ஆக
2025
12:08
முனீஸ்வரரை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கிராமத்தின் காவல் தெய்வமாக உள்ள முனீஸ்வரர், பல குடும்பங்களின் வீட்டு தெய்வமாகவும் உள்ளார். முனீஸ்வரரை முனியப்பன், முனியாண்டி, முனி அய்யா, முனியப்பர் என்று பல பெயர்களில் பக்தர்கள் அழைக்கின்றனர்.
பெங்களூரு நகரிலும் பல இடங்களில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. ஆனால் அர்ச்சகர் இல்லாத முனீஸ்வரர் கோவிலும் இங்கு அமைந்து உள்ளது. பொதுவாக கோவில் என்றால் சாமியை மூலஸ்தானத்தில் வைத்து இருப்பர். அர்ச்சர்கள் மூலம் தினமும் பூஜைகள் நடக்கும். பக்தர்கள் கொண்டு வரும் உணவுகள், பழங்கள், தேங்காய் வைத்து சாமிக்கு பூஜை நடக்கும். ஆனால் இந்த முனீஸ்வரர் கோவிலுக்கு மூலஸ்தானம் இல்லை; அர்ச்சகர் இல்லை. இந்த கோவில் எங்கு உள்ளது, அதன் நடைமுறை என்ன என்று பார்ப்போம்.
மொட்டை
பெங்களூரில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில், கோரமங்களா டெய்ரி சதுக்கம் பவானி நகர் பகுதியில் உள்ளது, குண்ட்லு முனேஸ்வரா கோவில். நுாறு ஆண்டுகள் பழமையானது. பாறை மீது 3 அடி உயர சிலையில் முனேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பாறையின் மேல் பகுதியில் குதிரைகளின் சிலைகளும் உள்ளது.
திறந்தவெளியில் உள்ள இக்கோவிலுக்கு அர்ச்சகர் இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கையாலேயே, முனீஸ்வரருக்கு பூஜை செய்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை, சாமியின் சிலை முன் படையலிட்டு பூஜை செய்து கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டம் நீங்க வேண்டும் என்று, முனீஸ்வரரிடம் வேண்டி கொள்ளும் பக்தர்கள், கோவிலில் உள்ள திரிசூலத்தில் பூட்டை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். தங்கள் கஷ்டம் நீங்கியதும் மீண்டும் கோவிலுக்கு வந்து, முனீஸ்வரருக்கு நைவேத்தியம் செலுத்துகின்றனர்.
குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, காது குத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இங்கு நடக்கின்றன. சில பக்தர்கள் நேர்த்திகடனாக அரிவாளை காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் தாங்கள் சார்ந்த சமூக முறைப்படி சாமியை வழிபடலாம். கோவிலுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்று இல்லை; எந்த நேரத்திலும் செல்லலாம்.
மெஜஸ்டிக்கில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி, ஆனேக்கல், அத்திப்பள்ளி, கோரமங்களா செல்லும் பி.எம்.டி.சி., பஸ்களில் பயணித்து, டெய்ரி சதுக்கத்தில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம்.