சைவ, வைணவ, சமண சமய தடயங்கள் புதுக்கோட்டை அருகே கண்டெடுப்பு
பதிவு செய்த நாள்
13
ஆக 2025 01:08
புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் ஒன்றியம் செனையக்குடியில், சைவ, வைணவ, சமண சமய தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதுக்கோட்டை தொல்லியல் கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன் தலைமையில், தொல்லியல் ஆய்வாளர்கள் சமீபத்தில், குளத்துார் ஒன்றியம் செனையக்குடியில், மக்கள் பயன்பாட்டில் இல்லாத கருவேலங்காடுகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பிடாரிகோவில் அருகே உள்ள வயல்மேட்டில், சோழர் கால கட்டுமானத்துடன் கூடிய கற்கோவிலை கண்டறிந்தனர். அப்பகுதியில் மூத்த தேவி சிற்பம், பெருமாள் கோவில், நில எல்லையை குறிக்கும் வாமண உருவத்துடன் கூடிய எல்லைக்கல், நந்தி சிற்பம் உள்ளிட்டவ ற்றையும் கண்டறிந்தனர். அதே ஊரின் பனைமர காட்டுப் பகுதியில், சிவன் கோவில் சொத்தின் எல்லையை குறிக்கும் சூலக்கல் ஒன்றையும் கண்டறிந்தனர். கரும்பு தோட்டத்தில் அய்யனார், வயல்வெளியில் ஆறுமுகன், கண்மாய் பகுதியில் விஷ்ணு சிற்பம், அதன் அருகிலேயே தலை துண்டிக்கப்பட்ட சமண சிற்பம் போன்றவற்றை கண்டறிந்தனர். இதுகுறித்து, மணிகண்டன் கூறியதாவது: செனையக்குடி வயல் மேட்டில் கள ஆய்வு செய்தோம். அந்த மேடு, சோழர் காலத்தில், சிவன் கோவிலாக இருந்ததை அறிய முடிந்தது. அங்கு, அழகான மூத்த தேவி எனும் தவ்வை சிற்பத்தை அடையாளம் கண்டோம். அதாவது, வளமையின் அடையாளமாக சிவன் கோவில்களில் வணங்கப்பட்ட மூத்த தேவியின் இருபுறமும், மாந்தன், மாந்தியும், உச்சியில் வெண்கொற்றக் குடை, இருபுறமும் சாமரங்கள் உள்ளன. இந்த சிற்ப உருவங்களின் அடிப்படையில், இது, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இங்குள்ள நந்தி, பாதி புதைந்த நிலையில் உள்ளது. இதுவும், இதே காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இங்கு, சோழர் கலையம்சத்துடன் கூடிய கோவில் துாண்களும் காணப்படுவதால், இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால், சோழர் கால கற்கோவிலின் தடயங்கள் வெளிப்படலாம். இதே கோவில் இடிபாட்டில், வைணவ நிலக்கொடையை குறிக்கும், வாமண கோட்டுருவ பலகை கல்லையும் கண்டறிந்தோம். அருகில் பெருமாள் கோவில் இருந்திருக்கலாம் என்பதையும், அதற்கான எல்லைக்கல், இந்த கோவில் கட்டுமானத்திற்காகவோ அல்லது பாதுகாப்பிற்காகவோ எடுத்து வரப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில், தஞ்சை தமிழ் பல்கலையின் தொல்லியல் துறை முன்னாள் மாணவர் ரெங்கராஜ், செனையக்குடி ஊர்த் தலைவர் மாரியப்பன், சிவனடியார் மாரிமுத்து, கிராம உதவியாளர் மாரிமுத்து, முருகேசன், மணிகண்டன், மணி, பாலசுப்பிரமணியன், திலீப்னா முருகானந்தம், வெள்ளைச் சாமி, பெரண்டையாப்பட்டி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். – நமது நிருபர் –
|