திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ஜப்பானிய ஆன்மிக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், முருகன் மற்றும் பழநி புலிப்பாணி ஆசிரமம் கௌதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக நேற்று முன்தினம் வந்தனர். நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்ற அவர்கள் மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உட்பட, அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கோவிலை சுற்றி வந்து முருகனை வழிபட்டனர். ‘வெற்றி வேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா’ என, அவர்கள் பக்தி கோஷமிட்டபடி, உற்சாகமாக சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்கள் கூறுகையில், ‘நாங்கள், ஜூன், 14 முதல் தமிழகத்தில் உள்ள பழநி, ராமேஸ்வரம் உட்பட, 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்று வருகிறோம். அதன் ஒருபகுதியாக, திருச்செந்துார் கோவிலில் முருகனை தரிசனம் செய்தோம்’ என்றனர்.