மாமல்லபுரம்; அயோத்தி ராமர் கோவிலில் நிறுவுவதற்காக, கர்நாடக சங்கீத வித்வான்களின் கற்சிலைகள், மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டு, அனுப்பப்பட்டன. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் அமைந்துள்ள ராமர்கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலின் மூலவர் சன்னிதி உள்ளிட்ட சன்னிதிகளின் கலையம்ச தேக்குமரக் கதவுகள், மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் வடிக்கப்பட்டன. அங்கு கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில், கர்நாடக சங்கீத வித்வான்களான, தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயர், கர்நாடகாவைச் சேர்ந்த புரந்தரதாசர் ஆகியோரின் கற்சிலைகளை நிறுவ, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அவற்றை வடிக்க, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்பக்கூடத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டது. வீணை இசைத்தவாறு அமர்ந்திருக்கும் தியாகராஜ சுவாமி, வீணை இசைத்தவாறு நின்றிருக்கும் அருணாசல கவிராயர், கைகூப்பியவாறு நின்றுள்ள புரந்தரதாசர் ஆகியோரின் கற்சிலைகள் தலா ஆறு அடி உயரத்தில், சிற்பக்கலைஞர் காளிதாஸ் தலைமையில் ஆறு மாதங்களாக வடிக்கப்பட்டன. தற்போது பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன.