கோவிலை புணரமைப்பு செய்து, புதுபிக்க பக்தர்கள், பொது மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையொட்டி, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பக்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம், உள்ளிட்டவை உபய தாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்பின் மூலம் புனரமைத்து கொள்ள இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனையொட்டி, முதல் கட்டமான 66 அடி உயரத்தில், 43 க்கு 23 அடி அகலத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் மூலவர் மற்றும் விமானம் தவிர இதர பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நேற்று மாலை நடைப்பெற்றது. கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, நாகராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் விமானம் தவிர கோவில் வளாகத்தில் இருந்த முத்துகுமாரசாமி, கொடி மரம், பலிபீடம், யாழி வாகனம், கன்னிமார் தெய்வங்கள், உள்ளிட்ட தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு சகுன விநாயகர் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள், பொது மக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.