மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா நேற்று (ஆக., 20) கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவில் சுவாமியின் புட்டுக்கு மண் சுமந்த லீலை, வளையல் விற்றது, நரியை பரியாக்கியது உள்ளிட்ட திருவிளையாடல்கள் நடத்தி காட்டப்பட உள்ளன.
ஆக.26 முதல் செப்., 6 வரை தினமும் அம்மன், சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலையில் ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர். ஆக.,26 முதல் தினமும் சுவாமியின் திருவிளையாடல் நடக்கிறது. ஆக.26 கருங்குருவிக்கு உபதேசம், 27ல் நாரைக்கு மோட்சமருளியது, 28ல் மாணிக்கம் விற்றல், 29ல் தருமிக்கு பொற்கிழி வழங்கல், 30ல் உலவாக்கோட்டை அருளியது, 31ல் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடக்கிறது. செப்.,1ல் வளையல் விற்றல் லீலையும், அன்றிரவு 7:35 மணிக்கு மேல் 7:59 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அடுத்தாண்டு சித்திரை வரை மன்னராக இருந்து ஆட்சி புரிவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதைத்தொடர்ந்து செப்.2ல் நரியை பரியாக்கியது, 3ல் புட்டுத்திருவிழா, 4ல் விறகு விற்ற லீலை நடக் கிறது. செப்.5ல் சட்டத்தேர், 6ல் உற்ஸவம் நிறைவடைகிறது. செப்.,3 புட்டுத்திருவிழா அன்று அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்ட பின் மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படும்.