பண்ருட்டி; பண்ருட்டி அருகே 2,000 ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண் தக்களி கண்டெடுக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்காவனுார் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் பண்ருட்டி அரசு கலை கல்லுாரி கணிணி அறிவியல் மாணவர் டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2,000 ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண் தக்களிகள் கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது: மேல் காவனுார் தென்பெண்ணை ஆற்று பகுயில் கள ஆய்வின்போது பழங்கால மக்கள் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட இரண்டு தக்களிகள் கண்டெடுக்கப்பட்டது. தக்களி என்பது களிமண்ணால் செய்து சுடப்பட்ட கூம்பு வடிவ அமைப்பைக் கொண்ட கருவி ஆகும் . கூம்பின் மேல் பகுதி பருத்தும், கீழ்பகுதி சிறுத்தும் கூர்மையாக காணப்படும். தக்களியின் மையத்தில் ஒரு துளையும் இடுவர்.
இந்த துளை வழியாக குச்சி அல்லது கம்பிகளைக் கொண்டு சொருகி அதன் மறுமுனை கூர்மையான அந்தக் கூம்புவடிவத்தின் முனையில் இருப்பதுபோல அமைத்துக் கொள்வர். பின் அதன் விளிம்பில் பருத்தியை வைத்துக் தக்களியின் நடுவில் சொருகி இருக்கின்ற குச்சி அல்லது கம்பியை வேகமாக சுழற்றுவர். இச்சுழற்சி காரணமாகக் கம்பியின் மேல் வைக்கப்பட்ட பருத்தியும் சுழன்று நுாலாகாக திரித்த நிலையில் வரும். இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது நுாலாக வெளியே வரும். அதனைக் கொண்டு பக்குவப்படுத்தி ஆடையாக நெய்து வந்தனர். தக்களிகள் தழிழக தொல்லியல் அகழ்வாய்வுகளில் மதுரை அருகே உள்ள கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பம்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவு கண்டறியப்பட்டது. இதன் மூலம் முன்னோர்கள் 2,000ம் ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.