திருப்பூர் அருகே காணப்படுவது நடு கல்லா? அய்யனார் சிற்பமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2025 10:12
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, நடுகல் எடுத்து வழிபட்டு வந்துள்ளனர். ஹிந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களுடன் சென்று, தொல்லியல் ஆய்வாளர்கள் அர்ச்சுனன், உத்திராடம், பாலாஜி ஆகியோர், கண்டியன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
‘‘கண்டியன்கோவில், கண்டீஸ்வர சுவாமி கோவில் மேற்கு மதில் சுவருக்கு வெளியே, பழமையான புடைப்பு சிற்பம் இருந்தது. ஒரு வீரன் அமர்ந்த நிலையில், வலதுகாலை மடித்து, இடதுகாலை குத்திட்டு வைத்த நிலையில் காணப்படுகிறது. ஜடா மகுடமும், இடையில் ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ளது. இருபுறமும் மலர்களை கையில் ஏந்திய பெண்களும், வெண்சாமரம் வீசும் பெண்களும் இருக்கின்றனர். சிற்பத்தில், இரண்டு நாய்களும், ஒரு பன்றியும் காட்சியளிக்கின்றன. இச்சிற்பம், 700 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்; நாய்கள், பன்றி ஆகியவை காணப்படுவதால், வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லாகவும் இருக்க வாய்ப்புள்ளது’’ என்று தொல்லியல் ஆய்வாளர் உத்திராடம் தெரிவித்தார். திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவியிடம் கேட்டபோது,‘‘கண்டியன்கோவில் அருகே கண்டறியப்பட்டது, பூரணி, புஷ்கலாவுடன் கூடிய அய்யனார் சிலை. கொங்கு பெருவழித்தடத்தின் அருகே, இவ்வாறு அய்யனாரை வைத்து முன்னோர் வழிபட்டு வந்துள்ளனர். எப்படியும், 700 முதல் 900 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்,’’ என்றார்.