மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2025 03:08
காரமடை; காரமடை அருகில் உள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத முதல் சனிக்கிழமை விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி திருக்கோயில் உள்ளது. நாடி வரும் பக்தர்களின் துயர் தீர்த்து ஜெய மங்களங்கள் வழங்குவதால் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று ஆவணி மாத முதல் சனிக்கிழமை விழாவையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மூலவர் அனுமந்தராயசாமி வெண்ணை உண்ட கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆவணி மாதம் கண்ணன் அவதரித்த மாதம். மருதூர் அனுமனும் இன்று வெண்ணை உண்ட கண்ணனாய் திருக்காட்சி அளித்தது பக்தர்களுக்கு பரவசத்தை தந்தது. காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுக்கள் பங்கு கொண்ட பஜனையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.