மதுரை; மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயில் தெப்பம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கோயில் நிதியில் சீரமைக்க அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கடிதம் ‘தெப்பத்தில் போட்ட கல்’ ஆக உள்ளது.
இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். பஞ்சபூத தலங்களில் இது நீர் ஸ்தலம். இங்கு வழிபடுவதன் மூலம் குபேர வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலுக்கென சிறிய இடப தீர்த்த தெப்பம் உள்ளது. சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர்மண்டியும், சிதிலமடைந்தும் உள்ளது. ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில துணைத்தலைவர் சுந்தரவடிவேல் கூறியதாவது: 2013ல் இக்கோயில் கும்பாபிஷே கம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு 2025ல் நடத்தியிருக்க வேண்டும். நடத்தவில்லை. செல்லுார் ராஜூ சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டுக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்யவில்லை என்றார். கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘‘மீனாட்சி அம்மன் கோயில் நிதி ரூ.1.25 கோடியில் இத்தெப்பத்தை சீரமைக்க அனுமதி கேட்டு அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பி பலமாதங்களாகிவிட்டது. அனுமதி கிடைத்தால் சீரமைப்பு பணி தொடங்கும்’’ என்றனர்.