‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷம் விண்ணதிர ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
30
ஆக 2025 11:08
திருப்பூர்: அவிநாசி அருகே முருகம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., முருகம்பாளையத்திலுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 26ம் தேதி, மகா கணபதி யாகத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை தினமும் காலை மற்றும் மாலையில், யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, 27ம் தேதி, யாகசாலை பிரவேசம், கோபுர விமான கலசங்கள் நிறுவப்பட்டன; அன்று மதியம், 3:00 மணிக்கு, கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்த குடம் ஊர்வலம் வந்து சேர்ந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஏழாம் கால பூஜையுடன் விழா துவங்கியது. காலை, 6:45 மணிக்கு கிழக்கு பிள்ளையார் கோவில், தொடர்ந்து, எல்லை பிள்ளையார் கோவில், காலை, 9:15 மணிக்கு மேற்கு பிள்ளையார் கோபுரம், ஸ்ரீ மாகாளியம்மன் கோபுரம், காலை, 10:00 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள், ‘ஓம் சக்தி... பராசக்தி’ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி, வழிபட்டனர். விழாவில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமி, பெங்களூரு வாழும்கலை குருகுலம் வேதபாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம் ஆகியோர் பங்கேற்றனர். யாக சாலை மற்றும் கும்பாபிஷேக பூஜைகளை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருத்துவ ஸ்தானிகர் சிவக்குமார சிவாச்சாரியார் தலைமையில் மேற்கொண்டனர். இரவு, 8:00 மணிக்கு, அம்மன் மலர் அலங்காரத்தில் ஊர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, நவக்கரை நவீன் குழுவினரின் கும்மியாட்டம், சங்கமம் கலைக்குழு நிறுவனர் கனகராஜ் தலைமையில் ஒயிலாட்டம், கம்பத் தாட்டம் நடந்தது. நேற்றிரவு, புலவர் ராமலிங்கம் தலைமையில், ‘வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது சொத்து சுகமா, சொந்த பந்தமா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இன்று முதல், 48 நாட்களுக்கு தினமும் மதியம், 12:00 மணிக்கு மண்டல பூஜை நடைபெறும். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் திருப்பணிக்குழுவினர், விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
|