அரியாங்குப்பம்; தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், பழமை வாய்ந்த முழியன்குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில், வில்லுக்கட்டி ஐய்யனாரப்பன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதையொட்டி, முழியன் குளத்தில், கலசநீர் எடுக்க நேற்று மாலை 3:00 மணியளவில், கோவில் திருப்பணிக்குழுவை சேர்ந்தவர்கள் சென்றனர். குளத்தில் மையப்பகுதியில், இறங்கி தண்ணீர் எடுத்த போது, சிலை ஒன்று தட்டுபட்டது. . சேற்றில் புதைத்திருந்த சிலையை வெளியில் எடுத்த போது, கிரைனட் கற்களால் செய்யப்பட்ட 2 உயரம் கொண்ட விநாயகர் சிலை எனத் தெரியவந்தது. சிலையை, சுத்தம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் கோவிலில் வைத்தனர். குளத்தில், விநாயகர் சிலை கிடைத்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.