திருவொற்றியூர்; ஆவணி மூலம் திருவிழாவையொட்டி, ஒய்யார நடனமாடியபடி திரிபுர சுந்தரி சமேத தியாகராஜ பெருமான், நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். அதன்படி, 2,000 ஆண்டுகள் பழமையான, தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களை போற்றி ஆண்டு தோறும் ஆவணி, மூலம் நட்சத்திரத்தில் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இவ்வாண்டும் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு, வெள்ளை சாமந்தி, தாமரை, பிச்சிப் பூக்களாலான பிரமாண்ட மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, உற்சவர் திரிபுர சுந்தரி சமேத தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, சப்பரத்தில் எழுந்தருளினார். கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து, வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, வடிவுடையம்மன் சன்னதி முன்பாக எழுந்தருளினார். பஞ்ச தீபாரதனை காாண்பிக்கப்பட்டு, கயிலாய வாத்தியங்கள் முழங்க, சாம்பிராணி துாபமிடப்பட்டு, ராஜ கோபுரம் வழியாக வெளியேறிய தியாகராஜர், ஒய்யார நடனமாடியபடி, நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.