மதுரை அமெரிக்கன் கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் அரிபாபு, ஆய்வு மாணவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மலைக்கோட்டை புராதன சின்னங்களை பார்வையிட்டனர். இங்குள்ள சிவன், பெருமாள் குடைவரை கோயில் சுவர்களில் இருந்த கல்வெட்டுக்களை படித்து, தகவல்களை சேகரித்தனர். மலைக்கோட்டைக்கு சென்று பாறையில் இருந்த, பழமையான ஓவியங்களை பார்வையிட்டனர். பேராசிரியர் அரிபாபு கூறுகையில், ‘‘திருமயம் கோட்டை, 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் காலத்தில், இக்கோட்டை ஆயுத கிடங்காக பயன்படுத்தப் பட்டது. பாறையின் அடிப்பகுதியில், பறவை மூக்கு, இயற்கை எழில் மரங்கள், வயல் வெளிகள், நடனமாடும் மங்கையர் போன்ற ஓவியங்கள் பாறை இடுக்கில் கண்டறியப்பட்டன. இந்த ஓவியம் 4000 ஆண்டுகள் பழமையானது,’’ என்றார்.