மைசூரு தசரா விழா; பக்தி பரவசத்துடன் பிருந்தாவனில் காவிரி ஆரத்தி
பதிவு செய்த நாள்
26
செப் 2025 11:09
மாண்டியா; மைசூரு தசராவை ஒட்டி, மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் இன்று முதல் 30ம் தேதி வரை காவிரி ஆரத்தி நடத்தப்பட உள்ளது. மைசூரு தசராவை ஒட்டி நடக்க உள்ள காவிரி ஆரத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி கே.ஆர்.எஸ்., அணை, பிருந்தாவன் பூங்காக்களில் கூடுதலாக மின்னொளி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் பகுதியில், இன்று மாலை 5:00 மணிக்கு காவிரி ஆரத்தியை துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார். ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள், விஸ்வ ஒக்கலிக மஹாசமஸ்தான மடாதிபதி நிஸ்சலானந்தா சுவாமிகள் உட்பட பல மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். கலாசார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. காவிரி ஆரத்தியை, ஸ்ரீரங்கபட்டணா நிமிஷாம்பா கோவில் அர்ச்சகர் தலைமையிலான குழுவினர் நடத்துகின்றனர். மாலை 6:45 முதல் இரவு 7:45 மணி வரை நடக்கும் ஆரத்தியில், 13 பேர் ஆரத்தி நடத்த, அவர்களுக்கு உதவியாக 40 பேர் இருப்பர். காவிரிக்கு சமர்ப்பண பூஜை செய்து, ஸ்ரீ காவிரி ஸ்தோத்திரம் செய்யப்பட்ட பின், காவிரி, விநாயகர், குருவை கவுரவிக்கும் வகையில், ‘வடபதி கணபதிம் பஜே’ பஜனை நடக்கிறது. பின், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரருக்கு பிரார்த்தனைகளும் சாமர சேவையும் நடக்கிறது. இந்நிகழ்ச்சி, ‘துாப ஆரத்தி’, ‘மந்த்ரோச்சரணே’, ‘புஷ்பார்ச்சனை’ என, ‘கும்ப ஆரத்தி’, ‘நாக ஆரத்தி’, ‘காவிரி’ ஆரத்தி என சங்கு முழங்குவதுடன் நிறைவடையும். நவராத்திரி துவக்கத்தை குறிக்கும் வகையில், கே.ஆர்.எஸ்., அணை, கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த மின் அலங்காரம் தினமும் மாலை 6:45 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஒளிரும். இன்று முதல் தினமும் இரவு 8:00 முதல் 9:30 மணி வரை கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும். பிருந்தாவன் பூங்காவினுள் செல்ல இரவு 9:30 மணி வரை டிக்கெட் வழங்கப்படும். கே.ஆர்.எஸ்., அணையின் தெற்கு, வடக்கு நுழைவு வாயில்கள், நடைபாதைகள், அணையின் மேல் பகுதி, பெலகோலா காகித ஆலை சதுக்கத்தில் இருந்து கே.எஸ்.ஆர்., அணை வரையிலான சாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
|