காளஹஸ்தியில் நவராத்திரி விழா; பல்வேறு அலங்காரங்களில் அம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2025 11:09
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி விழாவில் ஏழாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் மகாசன்டி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதே போல் பஜார் தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், மதுரை கல் அழகர் பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார், ஏழு கங்கை அம்மன் கோயிலில் உள்ள அம்மன் காள ராத்திரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள வேடாம் கிராமத்தில் உள்ள தட்சிணா காளியம்மன் மகா சண்டி தேவி அலங்காரத்திலும், பானகல் பொன்னாலம்மனும் மீனாட்சி அம்மன் அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். ஸ்ரீகாளஹஸ்தி நகரின் எல்லைப் பகுதியில் உள்ள பகதூர் பேட்டை தெட்டுப் பகுதியில் வீற்றிருக்கும் கருப்பு கங்கை அம்மன் ராஜ் ராஜேஸ்வரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழாவின் ஏழாம் நாள் என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.