பாலக்காடு; பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்களில், துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாலக்காட்டில், கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து "வாகச்சார்த்து என்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை 7:10 மணிக்கு உற்சவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உணவளிக்கும் "யானையூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நிகழ்வு நடந்தது. காலை 10:30 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சாரிமேளம் நிகழ்வு நடந்தது. இதை ஏராளமானோர் ரசித்து மகிழ்ந்தனர். மாலை, 3:30 மணிக்கும் ஐந்து யானைகள் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நிகழ்வு நடந்தது. அதன்பின், நிறமாலை தரிசனம், நாதஸ்வர கச்சேரி, உற்சவர் எழுந்தருளும் வைபவம் நடந்தது.