சதுரகிரி சங்கடங்கள்; அவசியமாகிறது அடிப்படை வசதிகள்.. பக்தர்கள் எதிர்பார்ப்பு
பதிவு செய்த நாள்
06
அக் 2025 10:10
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி மலை அடிவாரத்தில் மீட்கப்பட்ட 14 ஏக்கர் அரசு நிலத்தில் பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, தங்குமிடம், போதிய அளவிற்கு சுகாதார வளாக வசதிகள் எட்பட அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் மலைவாச சில ஸ்தலங்களில் ஒன்றாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட மக்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் தற்போது பல்வேறு மாநில மக்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சில சமயங்களில் வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். தற்போது தினமும் மலையேற அனுமதிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் சில ஆயிரம் பக்தர்களும், ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் பல ஆயிரம் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆனால், இவ்வாறு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம், குளியலறை, மருத்துவ மனை, தகவல் தொடர்பு, மலையேறும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மீட்பதற்கு டோலி வசதிகள் உட்பட பல்வேறு வசதிகள் போதுமானதாக இல்லாமல் பக்தர்கள் பாதிக்கப்படுவது பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இக்கோயிலில் நுழைவு வாயில் விருதுநகர் மாவட்டத்திலும், கோயில் மதுரை மாவட்டத்திலும் இருப்பதால் வனத்துறை, அறநிலையத் துறை, போலீஸ், வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய விருதுநகர் கலெக்டர் சுகபுத்திராவின் அதிரடி உத்தரவால், தாணிப்பாறை மலை அடிவாரத்தில் 14 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்கபட்டு, ஆடி அமாவாசையின் போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததால், பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டதால் பக்தர்கள் எளிதாக கோயிலுக்கு சென்று திரும்பினர். இந்நிலையில் இந்த இடத்தில் நிரந்தரமாக பஸ் ஸ்டாண்ட், வாகன பார்க்கிங், தங்குமிடம், போதிய அளவில் சுகாதார வளாக வசதிகள், ஓய்வறை, உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை, ஒருங்கிணைந்த அரசு துறை அதிகாரிகள் அலுவலகம், விபத்து சமயங்களில் போதிய மீட்பு வசதிகள், தகவல் தொடர்பு மையங்கள், தாணிப்பாறை விலக்கில் இருந்து கோயில் வரை ரோடு விரிவாக்கம், இருவழிப்பாதை, மின்விளக்குகள், நீர்வரத்து ஓடையில் பாலங்கள், அபாய இடங்களில் தடுப்பு சுவர், போலீஸ், வனத் துறை பாதுகாப்பு மையங்கள், அவசர மருத்துவ உதவி நிலையங்கள் அமைப்பது உடனடி அவசியமாகிறது. இதற்கு தமிழக அரசு சிறப்பு திட்டத்தை உருவாக்க செயல் படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
|