பதிவு செய்த நாள்
14
அக்
2025
01:10
ஹிந்து மதத்தில் உள்ள முக்கிய தெய்வங்களில் ஒருவர் மஹாலட்சுமி. இவரை வணங்கினால் செல்வ வளம் கொழிக்கும். அனைவரது வீட்டிலும் மஹாலட்சுமி உருவப்படம் இருக்கும். அதுவும் மஹாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மஹாலட்சுமி தேவி கோவில், உலக அளவில் பிரசித்தி பெற்றது. தங்கள் வாழ்நாளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவது முக்கியம் என்பது ஹிந்துகளின் கனவு.
இத்தனை சக்தி வாய்ந்த கோலாப்பூர் மஹாலட்சுமி கோவிலுக்கு இணையாக, கர்நாடகாவில் ஒரு கோவில் உள்ளது. வட கர்நாடக மாவட்டமான ராய்ச்சூர் கல்லுார் பகுதியில் கல்லுார் மஹாலட்சுமி கோவில் உள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் இருந்து 22 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இந்த கோவிலில் மூலவராக மஹாலட்சுமி தேவி உள்ளார். பல நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக திகழ்கிறது. முன்னொரு காலத்தில் மஹாலட்சுமியின் பக்தர், தேவியை நினைத்து தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதை பார்த்து, பூரித்து போன தேவி, பக்தருக்காக சுயம்புவாக தோன்றினார்.
இதையடுத்து, அப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இங்கு மஹாலட்சுமியின் அருகில் வெங்கடேஸ்வரர் விக்ரஹமும் உள்ளது. தினமும் பூஜை, புனஸ்காரங்கள் செய்யப்படுகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். நவராத்திரி நாட்களில் பெரும் விசேஷமாக காணப்படும்.
தேவியை மனதார வேண்டினால், செல்வத்தை கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுப்பாள் என பல பக்தர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் இயற்கையான முறையில் காட்சி அளிக்கிறது.
தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வேண்டுதலை நிவர்த்தி செய்யும் வகையில் நேர்த்திக்கடனாக புடவையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். இக்கோவில் காலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 3:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் ராய்ச்சூர் பஸ் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து பஸ் அல்லது டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: பெங்களூரு எலஹங்கா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ராய்ச்சூர் ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.