முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று மாலை, 3:00 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்தவர். பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இன்றும், நாளையும் அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. இன்று, சட்டக்கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில், பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கோவில் பஸ் வாயிலாகவும், படிக்கட்டு பாதை வாயிலாகவும், மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும். இன்று, 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பார்க்கிங், பஸ், மருத்துவ வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டுள்ளன.