பதிவு செய்த நாள்
27
அக்
2025
10:10
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடபழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. மகா கந்தசஷ்டி விழாவில் 22ம் தேதி முதல் நேற்று 26ம் தேதி வரை, காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் இரவும் முறையோ சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணியர் அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 6:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகியது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சூரசம்ஹார உத்சவம் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. நாளை 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம், மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் நவ., 1 வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.