பதிவு செய்த நாள்
27
அக்
2025
10:10
குன்றத்துார்; குன்றத்துார் முருகன் கோவிலில், சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.
குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள முருகன் கோவில் என்ற சிறப்பை, இக்கோவில் பெற்றுள்ளது.இங்கு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கடந்த 22ம் தேதி முதல் இன்று வரை லட்சார்ச்சனை நடந்தது. நேற்று மாலை, மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் உடனுறை நகைமுகவல்லி அம்பாளிடம், முருகர் சக்தி வேல் பெற்று, மீண்டும் மலைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து இன்று மாலை, சூரபத்மனை வதம் செய்ய, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. யானை, ஆடு, மாடு, குதிரை, புலி உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, முருகப்பெருமான் வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. சூரசம்ஹாரம் நடந்துகொண்டிருந்த போது மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா, ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.
முருகப்பெருமானுக்கு சாந்தி அபிஷேகம் சூரசம்ஹார நிகழ்வானது கடல் மீது திருச்செந்துாரிலும், மலை மீது திருப்பரங்குன்றத்திலும் வான் வழியில் திருப்போரூரிலும் நடந்ததாக ஐதீகம். அதன் பின், ஸ்ரீமுருக பெருமான் திருத்தணி செல்லும் வழியில், குன்றத்துாரில் உள்ள மலை குன்றின் மீது அமர்ந்து, ஸ்ரீகந்தழீஸ்வரருக்கு சிவாகம பூஜை செய்து, சூரசம்ஹார நிகழ்வுக்கான சினத்தை விடுத்து, திருத்தணிகை சென்றதாக ஐதீகம். ஆதலால், இவ்வூர் தென்திருத்தணிகை எனப் போற்றப்படுகிறது. இத்தல வரலாற்றை போற்றும் நிகழ்வாக, முருகப்பெருமான் மலை அடிவாரத்தில், சூரனை சம்ஹாரம் செய்த பின், இன்று இரவு ஸ்ரீகந்தழீஸ்வரர் கோவிலில் எழுந்தருளி, சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.