ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பாலஸ்தாபன பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2025 05:10
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், பாலஸ்தாபன பூஜை இன்று நடந்தது.
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள சுவாமி சன்னதிகள், ராஜகோபுரம் புனரைமக்க அறநிலையத்துறை சார்பில் ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு நவ. 29ம் தேதி திருப்பணிகள் துவங்கி நடந்து வந்தது. திருப்பணிகளை முடிக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், பணிகள் தொய்வானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையெடுத்து, ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முயற்சி மேற்கொண்டு திருப்பணி முழுவதும் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து கோவில் திருப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது. வரும் நவ., 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பாலஸ்தாபன பூஜை இன்று நடந்தது. கலச பூஜை, யாகசாலை பூஜை முடிந்து பள்ளியறை மண்டபத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. நாகராஜன், சோமு குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.