போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட கைலாய கீழச்சொக்கநாதர் கோயில் அமைந்து உள்ளது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் நடக்கும். இங்கு வேண்டி வழங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம். இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனை ஒட்டி கோயில் புனரமைப்பு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கட்டட பணிகள் துவங்க உள்ளது. நேற்று அறங்காவலர் குழு தலைவர் பாண்டி சுந்தரபாண்டியன் தலைமையில் கோயிலில் பாலாலயம் பூஜை நடந்தது. இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் கார்த்திக் முன்னலை வகித்தார். சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அறங்காவல் குழு நிர்வாகிகள் செந்தில்குமார், கணேசன், செல்வராஜ், சிவமுரளி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக கட்டட பணிகள் முடியும் வரை பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.