மேட்டுப்பாளையம்; காரமடையில் உள்ள மங்கள மகா கணபதி கோவிலில், கும்பாபிஷேகம் விழா நடந்தது.
காரமடையில் மங்கள மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக திருப்பணிகள் நடைபெற்றன. இதில் சப்த கன்னிமார் சுவாமி சன்னதி புதிதாக அமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி, மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜையும், இரண்டாம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தன. அதைத்தொடர்ந்து கோபுரத்தில் கலசம் வைத்து, மங்கள மகா கணபதி, சப்த கன்னிமார் ஆகிய சுவாமி சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை நான்காம் கால யாக பூஜையை நடந்தது. 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கோபுர கலசத்தின் மீதும், சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அஸ்வின் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக வேள்வி பூஜைகள் நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானமும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை காரமடை தாசபளஞ்சிக மகாஜன சங்க நிர்வாகிகள், திருப்பாவை பஜனைகள் குழு, மாதர் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்து இருந்தனர்.