பதிவு செய்த நாள்
28
டிச
2012
03:12
கவரும் விதத்தில் இனிமையாகப் பேசும் ரிஷபராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு ஆறாம் இடத்தில் வருடம் முழுவதும் அமர்ந்து தாராள நற்பலன்களை வாரி வழங்குகின்றனர். மே 28ல் ராசியில் உள்ள குரு இரண்டாம் இடமான மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். பெயர்ச்சிக்குப் பின், குருவும் அனுகூல பலன்களைத் தருவார். மனதில் புத்துணர்ச்சியும், செயலில் மேன்மையும் பெற்றுத் திகழ்வீர்கள். இதனால் துவங்குகிற பணிகள் எளிதாக நிறைவேறி எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரும். குருபகவானின் அமர்வால் ஆண்டின் முற்பகுதியில் மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவதால் அவமானம் அடைய நேரிடும். மே 28க்குப் பின் வாழ்வில் வளர்ச்சி மேலோங்கும். தம்பி, தங்கையரின் சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான மராமத்துப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இளவயதினருக்கு திருமணம் நல்லபடியாக நடக்கும்.தாயின் தேவைகளை தாராள செலவில் செய்து கொடுப்பீர்கள். புத்திரர்கள் வருட முற்பகுதியில் படிப்பு, வேலைவாய்ப்பில் நல்லமுன்னேற்றம் காண்பர். பிற்பகுதியில் படிப்பு தடுமாறும். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் கொள்வர். தக்க வழிகாட்டி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். எதிரிகள் உங்களுக்கு செய்கிற கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் வருமானம் அதிகரிப்பதால் பழைய கடனைச் செலுத்துவீர்கள். எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டகரமாக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயன்படுத்தி வளர்ச்சி காண்பீர்கள். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்வு உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். உறவினர் வருகையால் கலகலப்பு ஏற்படும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்கள் உதவுவதும் உதவி பெறுவதுமான சூழ்நிலை அமையும். ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தை உச்சம் பெற்ற சனிபகவான், நண்பரான ராகுவின் சேர்க்கையுடன் மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். விபத்து கண்டம் ஏதும் அணுகாத சுமூக வாழ்வியல் நடைமுறை இருக்கும். அன்றாட வாழ்வில் சுக சவுகர்யமும், தாராள பணவசதியும் அமைந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.மூத்த சகோதரர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் நல்ல வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். வருட முற்பகுதியில் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். பங்குதாரர்களின் ஆதரவு சீராக அமைந்திருக்கும். திறமைமிகு பணியாளர்கள் கிடைக்கப்பெறுவர். அவர்களின் ஒத்துழைப்பினால் பொருட்களின் தரம் சிறந்து நற்பெயரை பெற்றுத்தரும். திட்டமிட்டுச் செயல்பட்டு நிர்வாகச் செலவைப் பெருமளவு கட்டுப்படுத்துவர். தொழில்ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கூடும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் நிறைவேறும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலையைத் திறம்பட நிறைவேற்றுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்களிடம் சீரான நட்புறவு இருக்கும். தனியார் துறை பணியாளர்கள் ஓவர்டைம், அதிக சம்பளம் கிடைத்து குடும்பத்தேவைகளை மனமுவந்து நிறைவேற்றுவர்.
வியாபாரிகள்: தரம் நிறைந்த பொருட்களை கொள்முதல் செய்து சந்தையில் கூடுதல் வரவேற்பு பெறுவர். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினால் விற்பனையில் இலக்கு அதிகரிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். மூலதன தேவைகளுக்கு உரிய நிதிக்கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சரக்கு வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள் எளிதாக கிடைக்கும். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து அன்றாட பணிகளை நல்லவிதமாக நிறைவேற்றுவர். கணவரின் அன்பும், சீரான பணவசதியும் கிடைத்து சந்தோஷமாக இருப்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள், போட்டியாளர்களின் நிர்ப்பந்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆக தொழில் செய்வர். உற்பத்தி, விற்பனை சீராகி உபரி பணவரவைத்தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணமாகாதவர்களுக்கு மே 28க்குப் பின், நல்ல மாப்பிள்ளை அமைவார்.
மாணவர்கள்: படிப்பு செலவுக்கான பணவசதி பெறுவதில் இருந்த சிரமம் குறையும். தகுந்த பயிற்சியினால் ஞாபகத்திறன் வளரும். தரத்தேர்ச்சி அடைந்து ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவீர்கள். சக மாணவர்களின் நட்பு நல்லவிதமாக அமைந்து மனதிற்கு ஊக்கம் தரும். வேலைவாய்ப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிர்ப்பு விலகி பெற விரும்பிய பதவி, பொறுப்பு எளிதில் கிடைக்கப்பெறுவர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். ஆதரவாளர்களிடம் பெற்றுள்ள நன்மதிப்பு உயரும்.
விவசாயிகள்: இடுபொருட்கள் தாமதமின்றி கிடைக்கும். கடின உழைப்பினால் மகசூல் அளவு அதிகரிக்கும். விளைபொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
பரிகாரப் பாடல்:
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
ஜனவரி: ராகுசனி 6ல் இருப்பதால் நற்பலன் கூடும். வருமானம் நாலாவழிகளில் வந்து சேரும். சேமித்து மகிழ்வீர்கள். எதிரிபயம் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு.
பிப்ரவரி: குரு வக்ரம் பெறுவதால் உடல்நலனில் அவ்வப்போது தொந்தரவு ஏற்படும். 10ல் இருக்கும் செவ்வாயால் தொழிலில் பிரச்னை உருவாகும். மாதபிற்பகுதியில் சூரியன்
சஞ்சாரத்தால் தொழிலில் பிரச்னை நீங்கி அனுகூலம் அதிகரிக்கும்.
மார்ச்: புதன், சூரியன், சனி,ராகு நான்கும் நற்பலன் தரும்விதத்தில் இருக்கின்றனர். தொழிலில் அமோக வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சந்தோஷ அனுபவம் பெறுவர்.
ஏப்ரல்: விவசாயப்பணி சிறக்கும். சிலருக்கு புதிதாக நிலம் வாங்கும் யோகமும் உண்டு. வங்கிக்கடன் மூலம் தொழில் தொடங்க அல்லது விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். சூரியனின் சஞ்சாரத்தால் விரயம் ஏற்படவும் இடமுண்டு.
மே: சனி, ராகு இரண்டைத் தவிர வேறு யாரும் நன்மை அளிப்பதற்கில்லை. உடல்நிலையில் அதிருப்தி உண்டாகும். சிலருக்கு பணிச்சுமை ஏற்படும். உறவினர்களாலும் தொல்லை உருவாகும். வாகனப்பயணத்தில் நிதானம் அவசியம்.
ஜூன்: குரு பலத்தால் திருமணயோகம் உண்டாகும். சனி, ராகுவின் 6ம் இடசஞ்சாரமும் விசேஷமே. படித்து முடித்து வேலை தேடுபவர்கள் புதிய பணிவாய்ப்பைப் பெறுவர். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
ஜூலை: வருஷக் கிரகங்களால் நன்மையே. தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். சுபசெய்திகள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிதாக நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும்.
ஆகஸ்ட்: செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு, குரு ஆகிய அனைவராலும் நன்மையே உண்டாகும். சொத்து சேர்க்கையால் மனம் மகிழ்வீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகம் வந்து சேரும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
செப்டம்பர்: உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை தென்படும். பலவழிகளிலும் வருமானம் வந்து சேரும். கடன்சுமை குறையும். குடும்பத்தில் திருமணம், மழலைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். பெண்களால் பிரச்னை உண்டாக இடமுண்டு.
அக்டோபர்: சூரியனின் 6ம் இட சஞ்சாரம் வெற்றியை வாரி வழங்கும். வியாதி, கடன்தொல்லை நீங்கும். தொழிலில் நல்ல பணியாட்கள் வலிய வந்து சேருவர். செய்தொழிலில் மேன்மையும்,வளர்ச்சியும் கண்டு பெருமிதம் காண்பீர்கள்.
நவம்பர்: குருவின் வக்ரத்தால் நன்மை குறையும். உடல்நிலையில் பிரச்னை உருவாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழிலில் திடீர் பிரச்னையைச் சந்திக்க நேரிடும். பொருள் திருட்டு போகலாம்.அரசு விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.
டிசம்பர்: வக்ர குருவால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். எட்டாமிடச் சுக்கிரனால் ஓரளவு பிரச்னை கட்டுப்படும். உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவைப்படும். பயணத்திலும் பாதுகாப்பு முக்கியம். பணியிடங்களில் பிரச்னை வரலாம், பொறுமை தேவை.